முதற் பக்கம் arrow வர்த்தகப் பிரபலங்கள் arrow Muhammad Yunus - சிறு துளி பெரு வெள்ளம்
Muhammad Yunus - சிறு துளி பெரு வெள்ளம்
Sunday, 04 October 2009
Imageஅமைதிக்கான 2006 ஆண்டின் நோபெல் பரிசுக்கு வங்காள தேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் முஹம்மது யூனுஸ் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக பிபிசி வானொலிச் செய்தி கேட்டபோது தெரிய வந்தது.

பல்லாயிரக்கணக்கான ஏழைகள் பொருளாதார, சமூக முன்னேற்றம் பெறக் காரணமாக இருந்த நுண்கடன் (microcredit) திட்டத்தை செயல்படுத்திய அவருக்கும், அவர் தொடங்கிய கிராமின் வங்கிக்கும் (Grameen Bank) சேர்த்து நோபெல் பரிசு வழங்கப்படுகிறது.

வானொலிச் செய்தி கேட்டுவிட்டு மேலும் சில தகவல்களைப் பெறவேண்டி இணையத்தைத்
துழாவியதில் இன்னொரு ஆச்சரியம் கிடைத்தது. யூனுஸ், தற்போது நான் பணிபுரியும், பல்கலைக்கழகத்தில் தான் 1969 ஆம் ஆண்டும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அரைமணி நேரத்திற்கு பிறகு பல்கலைக்கழக வேந்தர் கோர்டன் கீ (Gordon Gee) அவர்களிடமிருந்து இந்த மகிழ்ச்சிகரமான செய்தியும், பல்கலைக்கழகத்தின் பழைய மாணவருக்கு கிடைத்த கௌரவத்தை நாம் பெருமையுடன் கொண்டாட வேண்டும் என்றும் அறிவித்து மின்னஞ்சல் அனைவருக்கும் வந்தது.

அடுத்த சில மணி நேரத்தில் சக இந்தியப் பணியாளர் ஒருவர் வேறு விஷயமாக பார்க்க வந்தபோது முதலில் சொன்னது "செய்தி தெரியுமா? இன்னொரு வங்காளிக்கு நோபெல் பரிசு கிடைத்திருக்கிறது" என்று பெருமை பொங்க கூறினார். இப்பெண்மணி கல்கத்தாகாரர்.

பிடிஐ நிறுவனச் செய்தியொன்றில், "ஒரு தெற்காசியருக்கு நோபெல் பரிசு கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், யூனுஸ் தன் நண்பர் என்பதில் பெருமை கொள்வதாகவும்" இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

இன்று பார்த்தால் இங்கு உள்ளூர் செய்தித்தாளில் "நோபெல் வென்றவரின் சிந்தைகள் இப்பகுதியில் செழுமைப்படுத்தப்பட்டன" என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டு விலாவரியாக எழுதியிருந்தார்கள். யூனுசுக்கு கற்பித்த பழைய பேராசிரியர்கள், அவரோடு பணிபுரிந்தவர்கள் பலரை செவ்விகண்டு மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

இப்படி பல பக்கங்களிலிருந்தும், தேசிய எல்லைகளைக் கடந்து, மொழி, பிரதேசம், கல்விநிலையங்கள் என்று ஏதாவது ஒரு ஒற்றுமை கண்டுபிடித்து பலரும் பெருமை கொள்ள விழையும் அளவுக்கு பெரும்சாதனை புரிந்தவர் என்பதில் ஐயமில்லை.

1976 ஆம் ஆண்டு ஜோப்ரா என்ற தன்னுடைய கிராமத்தில் மூங்கில் இருக்கைகள் செய்யும் ஒரு பெண்மணியுடன் பேச நேர்ந்தபோதே யூனுசுக்கு "யுரேகா" கணம் உருவானது.

அப்பெண்மணி உள்ளூர் கந்துவட்டிக்காரரிடம் கடன் பெற்று மூங்கில் வாங்கி, இருக்கைகள் தயாரித்து, விற்ற பணம் பெரும்பாலானதை கடன் கொடுத்தவ்ருக்கு திருப்பித் தரவேண்டிய அவல நிலையை அறிந்து அவருக்கு எப்படியாவது உதவ முடியுமா என்று யோசித்திருக்கிறார். பின் அவரும், அவருடைய மாணவர்களும் அக்கிராமத்தில் சிறிய ஆய்வை மேற்கொண்டு அந்த பெண்மணி போல மொத்தம் 42 மூங்கில் கூடை முடைபவர்கள் அந்த கந்துவட்டிக்காரரிடம் டன்பட்டிருப்பதாக தெரியவர, அவர்கள் அனைவரும் செலுத்தவேண்டிய தொகையை அவர்கள் சார்பில் செலுத்தினார்.

பிறகு அவர்கள் அனைவரும் அவருக்கு அந்த தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டனர். இதுவே அவர்களைப் போன்ற ஏழைகளுக்கு கடனுதவி செய்யும் திட்டத்தை மேற்கொள்ள காரணமாக இருந்தது.

பெரிய வங்கிகளில் கடன் பெற ஈடாக வைக்க ஏதுமற்ற வறியவர்களுக்கு சிறிய அளவில் கடனுதவியும், அக்கடனைத் திருப்பிச் செலுத்த போதிய அவகாசமும் கிடைத்தால் அதைக்கொண்டு அவர்கள் தங்களுக்குத் தெரிந்த தொழில்கள் செய்து தங்களை மேம்படுத்திக்கொள்ள முனைவார்கள் என்ற எளிய உண்மையைக் கண்டறிந்து அப்படிப்பட்டவர்களுக்கு கடனுதவி

வழங்கவே 1976 ஆம் ஆண்டு கிராம வங்கியைத் துவக்கினார். இவ்வங்கி கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 66 லட்சம் பேருக்கு கடனுதவி வழங்கியிருக்கிறது. இப்போது வங்காள தேசம் முழுவதும் 2,226 கிளைகள் மூலம் 71,371 கிராமங்களில் தன்னுடைய சேவையை செய்துக்கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடன் பெறுபவர்களில் 97 விழுக்காட்டினர் பெண்கள். கொடுக்கும் கடன்களில் 99 விழுக்காடு திருப்பிச் செலுத்தப்பட்டுவிடுகின்றன. கிராமின் வங்கியின் கணக்கெடுப்பின்படி, இதுவரை கடன் பெற்றவர்களில் 58 விழுக்காடு குடும்பங்கள் வறுமைகோட்டை தாண்டியிருப்பதாக தெரிகிறது. ஆண்களை விட பெண்கள் பொறுப்பானவர்கள் என்றும், சூழ்நிலைகள் சாதகமாக இருப்பின் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏழைகளாக உள்ளவர்கள் மிகுந்த நம்பகத்தன்மை உடையவர்கள் என்று தெரிகிறது.

சிறிய தொகையாக இருப்பதால் இது நுண்கடன் (Micro Credit) என்றழைக்கப்படுகிறது. இக்கடன்களைப் பெற ஈடாக எதுவும் வைக்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் கடன்
பெறலாம். ஆனால் முதலில் ஐவர் சேர்ந்த குழுவாக சேரவேண்டும். முதலில் இருவருக்கு கடன் வழங்கப்படும். அவ்விருவரும் கடன்களை திருப்பிச் செலுத்த ஆரம்பித்தவுடன் மற்றவர்களுக்கும் கடன்கள் வழங்கப்படும். ஒருவர் பெற்ற கடனை செலுத்தாவிட்டால் குழு செலுத்தவேண்டும் என்ற நிபந்தனை இல்லாவிட்டாலும் குழுவாக செயல்படுவதில் பொறுப்பு தானாக வந்துவிடுகிறது.

கிராமின் வங்கியில் வங்காள தேச அரசாங்கத்துக்கு உள்ள 6 விழுக்காடு பங்கு போக மீதி 94 விழுக்காடும் இவ்வங்கியில் கடன்பெறுபவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறது.

முஹம்மது யூனுஸ் 1948 ஆம் ஆண்டு வங்காள தேசத்தின் சிட்டகாங்க் பகுதியில் உள்ள ஜோப்ரா என்னும் கிராமத்தில் பிறந்தார். சிட்டகாங்கில் பள்ளிப் படிப்பும், டாக்கா பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்பும் முடித்தார். பிறகு அமெரிக்க அரசின் ஃபுல்ப்ரைட் ஆராய்ச்சியாளராக (Fullbright Fellow) வாண்டர்பில்ட் பல்கலைக்கழக்த்தில் (Vanderbilt University, Nashville) சேர்ந்து பொருளாதாரத் துறையில் 1971 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து அருகில் உள்ள நடு டென்னிசி மாநிலப் பல்கலைக்கழகத்தில் (Middle Tennesse State University, Murfreesboro) இரண்டு ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தார்.

அதன்பிறகு தாய்நாட்டிற்கு திரும்பி சிட்டகாங்க் பல்கலைக்கழத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். எழுபதுகளில் நிலவிய பஞ்சத்தினைப் போக்கப் போராடுவதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டார். அப்போது உதித்ததே நுண்கடன் என்கிற இந்த நூதன சிந்தனை. இங்கு உள்ளூர் செய்தித்தாளில் வந்த விவரங்களைப் படித்தால் அவரை அறிந்தவர்கள் எல்லோரும் அவருடைய
அறிவையும், ஆளுமையையும், தாய்நாட்டின் மீது கொண்டிருந்த அக்கறையையும் வானளாவப் புகழ்கின்றனர். இங்கு மாணவராகவும், பேராசிரியராகவும் இருந்த காலத்தில் வங்காள தேசத்தின் விடுதலையைக் கோரும் அரசியல் கருத்துப்படச் சுவரொட்டிகளை கல்லூரி வளாகத்தில் ஒட்டியதாக அவரை வேலைக்கமர்த்திய துறைத்தலைவர் பேராசிரியர் ஹான்ஸ் ம்யுல்லர் (Hans Mueller) நினைவுகூர்கிறார்.

"உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் வளரும் நாடுகளில் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த கடன்களை வழங்குகின்றன. இதனால் வறுமை மிகுந்த பகுதிகளில் நேரடியான பலன்கள் அதிகம் ஏற்படவில்லை. ஆனால் யூனுஸ் அடிமட்டத்திலிருந்து நடத்திய புரட்சியின் மூலம் நேரடியான பலன்களைப் பார்க்கமுடிகிறது" என்கிறார். கடந்த ஆண்டு வாண்டர்பில்ட் பல்கலைக் கழகத்தின்
மேலாண்மையியல் பள்ளியில் சிறப்பு விரிவுரை நிகழ்த்தியிருக்கிறார்.

அதன் பிறகு "இப்பள்ளியில் 'யூனுஸ் பொருளாதாரம்' என்ற பெயரில் புதிய அடிமட்ட அணுகுமுறை (bottom-of-the-pyramid approach) பாடத்தை ஆரம்பிப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம்" என்கிறார் இன்னொரு பொருளாதாரப் பேராசிரியர்.

யூனுசைப் பற்றியும், அவருடைய நுண்கடன் திட்டத்தைப் பற்றியும் கடந்த சில ஆண்டுகளாக பரவலாக செய்திகள் வந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்துவில் கூட அவருடைய செவ்வி ஒன்றைப் படித்ததாக நினைவு. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் 'சுய உதவிக் குழுக்கள்' கூட யூனுஸ் செயல்படுத்திய திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பது என் யூகம்.

இப்போது புதிதாகக் கிடைத்துள்ள நோபெல் பரிசு தவிர கடந்த பல ஆண்டுகளில் முஹம்மது யூனுஸ் அவர்களுக்கு வேறுபல பரிசுகளும், அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் முதல் "தனித்துவம் மிக்க பழைய மாணவர் விருது" (Distinguished Alumnus Award) 1996 யூனுசுக்கு அளிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய விருதான மெகசாசே விருது (Magasaysay Award), இந்திய அரசாங்கத்தின் காந்தி அமைதிப் பரிசு (Gandhi Peace Prize), சிட்னி அமைதிப் பரிசு (Sidney Peace Prize), உலக உணவுப் பரிசு (World Food Prize) போன்ற விருதுகளை ஏற்கனவே பெற்றிருக்கிறார்.

Last Updated ( Monday, 05 October 2009 )
Next >

advertisement

advertisement

advertisement